நாம் நம் குழந்தைகளை எதற்காகத் தயார் செய்கிறோம்? பதிவில் நாம் நம் குழந்தைகளின் இதயத்தில் (நிலத்தில்) “இறைவார்த்தை” என்னும் விதையை விதைக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம். அதன்தொடர்ச்சியாக நம் பிள்ளைகளின் இதயங்களை நாம் எவ்வாறு செம்மைபடுத்தலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்!
நமது ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து கூறியிருப்பது:
3“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. 5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; 6ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. 8ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
மத்தேயு 13:3-9
9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”
இயேசுவின் இந்த போதனையின் அடிப்படையில், 3 முக்கியமான சிந்தனைகளும் அதற்கான செயல்பாட்டுத் திட்டங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. நம் குழந்தைகளின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைபவர்களைப் பற்றி நாம் விழிப்புடன் இருக்கிறோமா?
“சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.” (மத்தேயு 13:4)
“அத்துமீறி நுழைபவர்கள்” என்பது இவையே: சமூக ஊடகங்கள் (social media), அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, விளையாட்டுகளில் மிதமிஞ்சிய ஈடுபாடு, ஆபாசம், மதுப்பழக்கம், புகைபிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், மற்றும் இதர தீய பழக்கங்கள்.
இவை யாவும் கவனச்சிதறல்கள் என்பதையும், இவற்றை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அவை அவர்களுக்குள் இருக்கும் எல்லா நன்மைகளையும் அழித்துவிடும் என்பதையும் நம் பிள்ளைகள் உணர்ந்து கொள்ள நாம் உதவுகிறோமா?
செயல்படுத்துவதற்க்கான அழைப்பு: கவனச்சிதறல்களைக் கண்டறிந்து அவற்றை வேரோடு பிடுங்கி எறிய குழந்தைகளுக்கு உதவுவோம். கவனச்சிதறல்களுக்கு மாற்றாக தனிப்பட்ட ஜெபம், குடும்ப ஜெபம் மற்றும் மகிழ்ச்சிக்குகரிய ஆன்மீகச் செயல்பாடுகளை (இசை, சைகைப் பாடல்கள், கலைப் படைப்புகள் போன்றவற்றின் மூலம் இறைவனைப் பாடித் துதிப்பது) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம்.
2. ஆன்மீகத்தில் வளர்வதற்கு அவர்களுக்குத் தகுந்த நேரத்தையும் மன அமைதியையும் நாம் வழங்குகிறோமா?
“வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.” (மத்தேயு 13:5)
கல்வி, சிறப்பு வகுப்புகள் (enrichment classes), கூடுதல் பாடத்திட்டம், விளையாட்டுப் பயிற்சிகள், இசை வகுப்புகள் என நம் பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றும்போது, இறைவார்த்தையை வாசிப்பதற்கோ அல்லது உள்வாங்குவதற்கோ அவர்களுக்கு எங்கே நேரம் அல்லது மன அமைதி இருக்கும்?
நமக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் குழந்தைகளை ஞாயிறு திருப்பலிக்கும், மறைக்கல்வி வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வது பயனற்றதாக முடிந்துவிடக்கூடும்.
செயல்படுத்துவதற்க்கான அழைப்பு: சில கூடுதல் செயல்பாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து (சலசலப்புகளைக் குறைத்து), அவர்கள் முழு இதயத்தோடு திருப்பலியில் பங்கேற்கவும், திருவருட்சாதனங்களைப் பெறவும், இறைவார்த்தையை வாசித்து தியானிக்கவும் நேரத்தை உருவாக்குவோம்.
3. நம் குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencers) யார் என்பதில் நாம் விழிப்புடன் இருக்கிறோமா?
“மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.” (மத்தேயு 13:7)
நம் குழந்தைகளின் நண்பர்கள் யார், அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதை நாம் கடைசியாக எப்போது சரிபார்த்தோம்? இங்கு செல்வாக்கு செலுத்துபவர்கள் என்பது பிரபலங்கள், திரைப்பட நாயகர்கள் மற்றும் புகழ், பெருமை போன்ற உலக ஆசைகளாகவும் இருக்கலாம்.
செயல்படுத்துவதற்க்கான அழைப்பு: நம் குழந்தைகளுக்கு மிக நெருங்கிய நண்பர்களாக (besties அல்லது குறைந்தபட்சம் நல்ல தோழர்களாக) மாற முயல்வோம். முன்மாதிரியான நண்பர்கள், புனிதமான குருக்கள், ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் புனிதர்கள் போன்ற போற்றத்தக்க நல்வழிகாட்டிகளை அவர்கள் கண்டடைய அவர்களுக்கு உதவுவோம்.
நமது லட்சியம்: நம் பிள்ளைகளின் இதயங்களை உழுது “வளமான நிலமாக” மாற்றுவது…
“இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.” (மத்தேயு 13:8)
நம் குழந்தைகளின் இதயங்களை இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதற்கும், உண்மையான கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்க்கைமுறையின் மூலம் அவர்களின் இதயங்களை செம்மைபடுத்தவும் நாம் மனப்பூர்வமாகத் தயார் செய்தால், இறைவார்த்தை அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றி, நித்திய வாழ்விற்கான நற்கனிகளைத் தரச் செய்யும்.

Leave a comment